Published Date: February 28, 2023
CATEGORY: CONSTITUENCY
தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்தக் கூட்டத்தை, 2023 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 20 ஆம் நாள், திங்கட்கிழமை அன்று காலை 10 மணிக்கு,சென்னை - 600 009, தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவை தலைவர் அவர்கள் கூட்டியுள்ளார்கள்.
மேலும் இன்று காலை 10 மணிக்கு 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்பெறும். இவ்வாறு சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வுக் குழு கூடி முடிவு செய்யப்படும்.
அதிமுக இருக்கை விவகாரத்தில் ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் யார் எங்கு அமர வேண்டும் என்பது என் அதிகாரத்துக்குட்பட்டது. அது குறித்து ஏற்கனவே அறிவித்துவிட்டோம்.
மார்ச் 28-ம் தேதி முன்பன மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படும். இவ்வாறு பேரவைத் தலைவர் மு. அப்பாவு கூறினார்.
Media: Murasoli